திருச்செந்தூர் கந்தசஷ்டி கடற்கரையில் தான் நடைபெறும் – தமிழக அரசு

திருச்செந்தூரில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் கடற்கரையில்தான் நடைபெறும் என மதுரை நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு வருகிற 21-ந் தேதி வரை விழா நடைபெற உள்ளது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெறும். அதேபோல திருக்கல்யாண நிகழ்ச்சி, அங்கு உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறும். இந்த விழாவில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். ஆனால் இந்த வருடம் கொரோனா நோய்தொற்று காரணமாக சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகள் கோவிலின் உள்ளே உள்ள மண்டபத்தில் நடைபெறும் என தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டது. இது ஏற்கத்தக்கது அல்ல. திருவிழாவானது பாரம்பரிய முறைப்படி நடைபெற வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி திருச்செந்தூர் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் வழக்கம்போல கடற்கரையில் தான் நடக்கிறது அதேபோல திருக்கல்யாணமும் கோவில் வளாகத்திற்குள் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு நடக்கிறது என்று தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *