பக்தர்கள் பங்கேற்பின்றி திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹார விழா : புகைப்படங்கள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா இன்று மாலை நடைபெற்றது. கரோனா விதிகள் காரமணாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பல்வேறு விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 15-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலை புறப்பாடு, மூலவர், சண்முகருக்கு உச்சிக்கால பூஜைக்கு பின்னர் யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு தீபாராதனை நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் திருநாளான இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மதியம் சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது. மாலை 4.30 மணி அளவில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளினார். தொடர்ந்து கடற்கரை நுழைவாயில் பகுதியில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது.

திருச்செந்தூர் கடற்கரை முகப்பில் 300க்கு 300 சதுர அடியில் மிகக் குறைவான பக்தர்களோடு இந்த வருடம் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் மாயையே உருவான யானை முகனையும், பின்னர் கன்மமே உருவாக கொண்ட சிங்கமுகாசூரனையும், தொடர்ந்து ஆணவமே உருவான சூரபத்மனையும் சுவாமி ஜெயந்திநாதர் வேல் கொண்டு அடுத்தடுத்து வதம் செய்தார். இறுதியாக மாமரமும், சேவலுமாக உருமாறி வந்த சூரபத்மனை சேவலும், மயிலுமாக மாற்றி சுவாமி ஆட்கொண்டார். மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியாகவும் சுவாமி ஏற்றுக் கொண்டார்.

சூரசம்ஹார நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.கி.செந்தில் ராஜ், கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். ஐ.ஜி. முருகன், டி.ஐ.ஜி. பிரவீண்குமார் அபினபு, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணு சந்திரன், திருச்செந்தூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங், சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரித்திவிராஜ், தக்கார் கண்ணன் ஆதித்தன், திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்ரியா, இணை ஆணையர் கல்யாணி, உதவி ஆணையர் செல்வராஜ், வட்டாட்சியர் முருகேசன், முன்னாள் தக்கார் கோட்டை மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில், திருச்செந்தூர் ஏ.எஸ்.பி. ஹர்ஷ்சிங் மேற்பார்வையில் 2,000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *