கோவில்பட்டி பகுதியில் 8 அம்மா மினி கிளினிக்குகள் : அமைச்சர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார்

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 8 கிராமங்களில் அம்மா மினி கிளினிக்குகளை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தோணுகால், வெங்கடேஷ்வரபுரம், கரடிகுளம், தளவாய்புரம், தலையால்நடந்தான்குளம், முடுக்கலாங்குளம், காமநாயக்கன் பட்டி, பாண்டவர் மங்கலம் ஆகிய கிராமங்களில் அம்மா மினி கிளினிக்குகள் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு, அம்மா மினி கிளினிக்குகளை துவக்கி வைத்தார்.

மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது: நமது மாவட்டத்தில் அம்மா மினி கிளினிக்குகள் அமைக்க மொத்தம் 51 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கோவில்பட்டி சுகாதார மாவட்டத்தில் 21 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு 9 இடங்களில் முதல்கட்டமாக துவக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இன்று 8 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் துவக்கி வைக்கப்படுகிறது. இந்த மினி கிளினிக்கில் ஒரு மருத்துவ அலுவலர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளர் பணியில் இருப்பார்கள்.

காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் கிராம மக்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்படும். மேலும், இங்கு பல்வேறு பரிசோதனைகள் வசதிகளும், தடுப்பூசி உள்ளிட்ட சிறப்பு சேவைகளும் வழங்கப்பட உள்ளது. இதுவரை நீங்கள் தொலைதூரம் உள்ள பகுதிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளதை தவிர்க்கும்பொருட்டு இன்று அம்மா மினி கிளினிக் துவக்கப்பட்டுள்ளதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன், மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநர் அனிதா, ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *