காவல்துறை சுதந்திரமாக இயங்குவது அதிமுக ஆட்சியில்தான் – அமைச்சர் சி.வி.சண்முகம் அறிக்கை..

அ.தி.மு.க. ஆட்சியில்தான் காவல்துறை சுதந்திரமாக இயங்குகிறது என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

அமைச்சர் சி.வி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக காவல்துறை முழுமையாக அரசியல் மயமாக்கப்பட்டுவிட்டதாகவும், சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டதாகவும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தி இருக்கிறார். இது உண்மைக்கு மாறானது, உள்நோக்கம் கொண்டது.

கடந்த தி.மு.க. ஆட்சியில் அப்பாவி மக்களை மிரட்டி நிகழ்த்தப்பட்ட நிலம் அபகரிப்புக்கு, ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க, நில அபகரிப்பு தடுப்பு சட்டமும், நில அபகரிப்பு சட்ட பிரிவும், இந்தியாவிலேயே முதன் முதலாக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்டது என்பதும், அதன் தொடர்ச்சியாக நில அபகரிப்புகளில் ஈடுபட்ட பெரும்பான்மை தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதும் வரலாற்றின் உண்மை. சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதையும், உலகம் ஒருபோதும் மறவாது.

சட்டம்-ஒழுங்கை என்றும் பேணிக்காப்பதில் எவ்வித சமரசத்தையும் ஏற்றுக்கொள்ளாத இயக்கம் அ.தி.மு.க., தவறு இழைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டிப்பதற்கு தயங்காத ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி. இதனை மக்கள் நன்கு அறிவார்கள்.

Tamil Nadu Police Training Academy | Puthiya Siragugal – Puthiya ...

எனவே, சட்டம்-ஒழுங்கை பேணி காக்கும் அ.தி.மு.க. அரசை குற்றம்சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது என்பதை தமிழக மக்கள் அறிவார்கள். சாதி, மத மோதல்கள் இல்லாத பூமியாக, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டி, குற்றங்களை தடுப்பதிலும், குற்றங்களை கண்டுபிடித்து, குற்றவாளிகளை தண்டிப்பதிலும் சிறந்த மாநிலம் தமிழ்நாடு என ‘இந்தியா டுடே’ குழுமத்தால் விருது வழங்கப்பட்டுள்ளது. அதுபோலவே மத்திய அரசு அறிவித்த விருதுகளில் மூன்றில் ஒரு பங்கை வென்று சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதையும், சட்டம் -ஒழுங்கை பேணிக்காத்ததற்காக விருது பெற்றதையும் நாடறியும்.

அ.தி.மு.க. ஆட்சியில், காவல்துறை சுயமாக, சுதந்திரமாக கட்டுப்பாட்டுடன் இயங்கும், இது வரலாறு. தமிழக காவல்துறை நவீனமயமாக்கப்பட்டு, குற்ற நிகழ்வுகளை குறைத்த பெருமை, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவையே சாரும். அவர் வழியில் தற்போது நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சியில் காவல்துறை மேலும் சிறப்புடன் பூரணமாக சுதந்திரமாக அரசியல் தலையீடுகள் இல்லாமல், அறத்தின் வழியில், நெஞ்சுரத்தின் நெறியில், தமிழக காவல்துறை செயல்பட்டு வருவதையும், அதிலும் குறிப்பாக கொரோனா காலத்தில் இரவு, பகல் பாராது தம்மை மெய்வருத்தி தமிழக காவல்துறை ஆற்றிவரும் தொண்டுகளையும், மக்கள் அறிவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *