ஸ்டெர்லைட் ஆலையில் பலத்த பாதுகாப்பு: 4 மாவட்ட எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் குவிப்பு!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக பயன்படுத்தலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் தூத்துக்குடி மாநகர் முழுவதும் தமிழகம் சட்ட ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ஜெயந்த் முரளி தலைமையில் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலை பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வஜ்ரா வாகனம், தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட வாகனங்களும் ஆலை நுழைவு வாயிலில் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ஜெயந்த் முரளி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாதன், ஸ்டெர்லைட் ஆலை நுழைவு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதனிடையே ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீண்டும் போராட்டம் நடத்தக்கூடும் என்று போலீசார் சந்தேகிப்பதால் 3 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகத்திற்கு பணிக்கு சென்ற அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுன் சிங் தலைமையில் ஏராளமான போலீசார் ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பாதுகாப்பு பணியை நெல்லை மண்டல டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிமன்யு நேரில் ஆய்வு மேற்கொண்டார். எந்தவொரு வழியாகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் வருவதை தடுக்க சி.சி.டி.வி. கேரமா மற்றும் டிரோன் கேமரா மூலம் ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *